உச்சியிலிருந்து தொடங்கு!
வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனை திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும்,


வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனை திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வது தான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது.
உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்தித்தாலும், சருகுகளை மிதித்ததைப் போல கருதிக் கொண்டு துவளாமல் முன்னேறுபவர்கள் தோல்வியை வெற்றிக்கான உரமாக்கிக்கொண்டு உயர்கிறார்கள். அவர்கள் புயல் வீசினாலும் புறமுதுகு காட்டாத பராக்கிரமசாலிகள். அவர்களையே வாழ்க்கை வாழ்த்தி மகிழ்கிறது.
மகிழ்ச்சி என்பது வகிக்கிற பதவிகளாலோ, பெறுகிற பட்டங்களாலோ, குவிக்கிற பதக்கங்களாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. இவை அனைத்தையும் அடைந்த பிறகும் விரக்தி மனப்பான்மையில் விழுந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள்.
ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றவர்களை விட வெண்கலப் பதக்கத்தைப் பெற்றவர்கள் அதிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். வெள்ளி பெற்றவர்கள் தங்கத்தைத் தவற விட்டுவிட்டோமே எனத் தவிக்கும்போது, வெண்கலத்தை அடைந்தவர்கள் எப்படியோ பதக்கப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டோமே என்ற களிப்போடு புகைப்படத்தில் காணப்படுகிறார்கள். பெற்றது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கவில்லை: அந்த நொடியில் அவர்களுடைய மனப்பான்மையே எந்த அளவிற்கு மகிழ்ச்சிப் பதாகையை அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.
நான் பள்ளியில் படிக்கும்போது என்னைப் பார்த்து ஒருவர் ஆங்கிலத்தில், ""What is your father?'' (வாட் ஈஸ் யுவர் ஃபாதர்) என்று கேட்டார். அப்போது எனக்கு அது புரியவில்லை. இதே வினாவை மற்ற மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கள் தந்தையின் உத்தியோகத்தை உரக்கச் சொன்னார்கள்.
"உன் தந்தை என்ன?' என்பது தான் அக்கேள்விக்கான தமிழாக்கம். அப்படியென்றால் ஒரு மனிதர் என்பவர் அவர் ஆற்றும் பணி மட்டும் தானா! அந்த ஒன்றை வைத்துதான் அவர் என்ன என்பதை முடிவு செய்ய முடியுமா? ஒருவர் உணவகத்தில் பரிமாறும் சிப்பந்தியாக இருக்கலாம். அதற்காக, இருத்தலியல்வாதி சாத்தர் குறிப்பிடுவதைப்போல அவர் தன்னைப் பரிமாறுபவராகவே சகல நேரமும் பாவிக்கும் தவறான நம்பிக்கைக்குள் தள்ளப்பட வேண்டுமா! அவர் எந்தச் சூழலிருந்தாலும், எந்த இடத்திலிருந்தாலும், எந்த விழாவில் கலந்து கொண்டாலும், தன்னைப் பரிமாறும் சிப்பந்தியாகவே கருதிக் கொண்டு பழக வேண்டுமா?
ஒரு மனிதர், அவர் பணியைத் தாண்டியவர். அவர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கலாம். அதே நேரத்தில் கலைகளின் நேயராக, கவிதை எழுதுபவராக, இயற்கை ஆர்வலராக, பறவைப் பார்வையாளராக, அரசியல் விமர்சகராக, சமூக நோக்கராக, சிறந்த சொற்பொழிவாளராக, தேர்ந்த படிப்பாளியாக, அற்புத நடனமாடுபவராக, நேர்மை ததும்பும் மனிதராக பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஆளுமையாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் பன்முகத்தோற்றம் கொண்டவன். அவன் இருக்கும் சூழலுக்கேற்ப அவனுடைய ஆற்றல் வெளிப்படுகிறது. பூங்காவிற்குள் செல்கிறபோது அவனும் பூஞ்செடியாக மாறிப் போகிறான். உயிரியல் பூங்காவிற்குள் நுழைகிறபோது குழந்தையாகிவிடுகிறான். நூலகத்திற்குள் புகுகிற போது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கமாக மாறி விடுகிறான். அவனுக்குள் இருக்கும் அளவற்ற பரிமாணங்களைச் சின்ன குப்பிக்குள் சிறைப்படுத்த முயற்சி செய்வதைப் போலத்தான் ஒருவனை பணியோடு மட்டும் தொடர்புபடுத்திச் சொல்வதும்.
நான் பலமுறை கவனித்திருக்கிறேன்...
ஒருவரை அறிமுகப்படுத்தும்போது அவருடைய பெயரைச் சொன்னதும் பதவியைச் சொல்லும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. ஓய்வு பெற்றவரையும் அவர் வகித்த பதவியைச் சொல்லியே சுட்டிக் காட்டுவது இங்கு மரபு. எந்தப் பதவியிலும் இல்லாதவரையும் பழைய பதவியைச் சொல்லித்தான் அறிமுகப்படுத்துகிறோம்.
ஒரு நாளுக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒருவர் பணிக்காக செலவு செய்கிறார். அந்த எட்டு மணி நேரத்தில் கூட உணவு அருந்தும்போதும் நண்பர்களோடு உறவாடும்போதும் அவருடைய ஏனைய பரிமாணங்கள் அவ்வப்போது மூக்கை நீட்டுகின்றன. இருந்தாலும் ஒருவரை அவர் பதவியை வைத்துத்தான் மதிப்பிடுவது என்கிற மேற்கத்திய மனப்பான்மைக்கு நாம் ஆட்பட்டுவிட்டோம்.
இந்தக் குறியீடு ஒருவருடைய ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக அல்ல. அவருடைய அதிகார வட்டத்தை உணர்த்துவதற்காக.
ஒருவருடைய வெற்றி தோல்வி என்பது முழுக்கக் முழுக்க அவருடைய பதவியைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் தவறான போக்கு இளைஞர்களிடம் பெரிய பதவியை அடைந்தால் மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமானது என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, அதில் சற்றுப் பின்தங்கியவர்கள் தோல்வி மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் அடைய முடியாமல் போன இலக்கை எண்ணி வருத்தத்துடன் வாடுகிறார்கள். இன்னும் சிலரோ இனி வெளிச்சத்திற்கு வழியே இல்லை என்கிற விரக்தியில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
சின்ன வயதிலிருந்தே நினைத்ததை அடைவது தான் வெற்றி என்கிற எண்ணம் குழந்தைகளின் மனத்தில் ஏற்படுத்தப்படுகிறது. சின்னக் குடும்பம் என்கிற நிலை வந்த பிறகு தாங்கள் அடைய முடியாததையெல்லாம் குழந்தைகளுக்கு எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆசையோடு பெற்றோர்கள் வினையாற்றுகிறார்கள்.
குழந்தைகள் கேட்ட பொம்மைகள் உடனடியாக அவர்கள் கைகளில் முளைக்கின்றன. உச்சரித்த தின்பண்டம் அவர்கள் தட்டை நிரப்புகிறது. கேட்டதையெல்லாம் அடைந்துவிடுகிற குழந்தைகள், விரும்பிய படிப்பையும் பெற்றோர்கள் பொம்மையைப் போல வாங்கித் தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நேசித்த பின் உடனடியாக சம்மதம் சொல்லவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள்.
நினைத்தற்கு மாறாக நிகழ்வுகள் பிறழ்கிற போது ஏமாற்றமடைகிற இளைஞர்கள் வாழ்வையே வெறுக்கிறார்கள். மகிழ்ச்சியின் உச்சிக்கு செல்ல வேண்டிய அவர்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக உச்சியிலிருந்து குதிக்கத் தயாராகிறார்கள். வாழ்க்கையை இறுக அணைத்து உச்சி முகர வேண்டிய பருவத்தில் தொடர்புடைய அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விடைபெற்றுவிடுகிறார்கள்.
சின்ன தெளிவு மட்டும் இருந்திருந்தால், வாழ்க்கையின் வசந்த பக்கங்களை அவர்கள் வாசித்திருப்பார்கள். வாழ்க்கையெனும் வரத்தை இழந்திருக்க மாட்டார்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...